At-Tur

سورة الطور

சூரா 52 · மக்கிய்யா · 49 வசனங்கள்

52:1ஜுஸ் 27 · ப. 523

وَالطُّورِ1

தூர் (மலை) மீது சத்தியமாக!
52:2ஜுஸ் 27 · ப. 523

وَكِتَابٍ مَسْطُورٍ2

ஏட்டில் எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக!
52:3ஜுஸ் 27 · ப. 523

فِي رَقٍّ مَنْشُورٍ3

விரித்து வைக்கப்பட்ட,
52:4ஜுஸ் 27 · ப. 523

وَالْبَيْتِ الْمَعْمُورِ4

பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக!
52:5ஜுஸ் 27 · ப. 523

وَالسَّقْفِ الْمَرْفُوعِ5

உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!
52:6ஜுஸ் 27 · ப. 523

وَالْبَحْرِ الْمَسْجُورِ6

பொங்கும் கடலின் மீது சத்தியமாக!
52:7ஜுஸ் 27 · ப. 523

إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ7

நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும்.
52:8ஜுஸ் 27 · ப. 523

مَا لَهُ مِنْ دَافِعٍ8

அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
52:9ஜுஸ் 27 · ப. 523

يَوْمَ تَمُورُ السَّمَاءُ مَوْرًا9

வானம் துடித்துச் சுற்றிக் குமுறும் நாளில்,
52:10ஜுஸ் 27 · ப. 523

وَتَسِيرُ الْجِبَالُ سَيْرًا10

இன்னும், மலைகள் தூள் துளாகி விடும் போது,
52:11ஜுஸ் 27 · ப. 523

فَوَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ11

(சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான்.
52:12ஜுஸ் 27 · ப. 523

الَّذِينَ هُمْ فِي خَوْضٍ يَلْعَبُونَ12

எவர்கள் (பொய்யானவற்றில்) மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனரோ,
52:13ஜுஸ் 27 · ப. 523

يَوْمَ يُدَعُّونَ إِلَىٰ نَارِ جَهَنَّمَ دَعًّا13

அந்நாளில் அவர்கள் நரக நெருப்பின் பால் இழுக்கப்படுவோராக இழுக்கப்படுவர்.
52:14ஜுஸ் 27 · ப. 523

هَٰذِهِ النَّارُ الَّتِي كُنْتُمْ بِهَا تُكَذِّبُونَ14

அந்நாளில்; (அவர்களுக்குக் கூறப்படும்:) "நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த (நரக) நெருப்பு இதுதான்.
52:15ஜுஸ் 27 · ப. 524

أَفَسِحْرٌ هَٰذَا أَمْ أَنْتُمْ لَا تُبْصِرُونَ15

"இது சூனியம் தானா? அல்லது பார்க்க முடியாது (குருடர்களாக) ஆகிவிட்டீர்களா?
52:16ஜுஸ் 27 · ப. 524

اصْلَوْهَا فَاصْبِرُوا أَوْ لَا تَصْبِرُوا سَوَاءٌ عَلَيْكُمْ ۖ إِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُونَ16

"நீங்கள் அதில் நுழையுங்கள், பிறகு நீங்கள் (அதன் வேதனையைச்) சகித்துக் கொள்ளுங்கள்; அல்லது சகித்துக் கொள்ளாதிருங்கள், (இரண்டும்) உங்களுக்குச் சமமே, நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்த வற்றிற்காகத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்."
52:17ஜுஸ் 27 · ப. 524

إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَنَعِيمٍ17

நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள்.
52:18ஜுஸ் 27 · ப. 524

فَاكِهِينَ بِمَا آتَاهُمْ رَبُّهُمْ وَوَقَاهُمْ رَبُّهُمْ عَذَابَ الْجَحِيمِ18

அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் - அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான்.
52:19ஜுஸ் 27 · ப. 524

كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ19

(அவர்களுக்குக் கூறப்படும்:) "நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்."
52:20ஜுஸ் 27 · ப. 524

مُتَّكِئِينَ عَلَىٰ سُرُرٍ مَصْفُوفَةٍ ۖ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ20

அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.
52:21ஜுஸ் 27 · ப. 524

وَالَّذِينَ آمَنُوا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِإِيمَانٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَا أَلَتْنَاهُمْ مِنْ عَمَلِهِمْ مِنْ شَيْءٍ ۚ كُلُّ امْرِئٍ بِمَا كَسَبَ رَهِينٌ21

எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியனரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் - ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான்.
52:22ஜுஸ் 27 · ப. 524

وَأَمْدَدْنَاهُمْ بِفَاكِهَةٍ وَلَحْمٍ مِمَّا يَشْتَهُونَ22

இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகளையும் இறைச்சியையும், நாம் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்போம்.
52:23ஜுஸ் 27 · ப. 524

يَتَنَازَعُونَ فِيهَا كَأْسًا لَا لَغْوٌ فِيهَا وَلَا تَأْثِيمٌ23

(அமுதம் நிறைந்த) ஒருவர் கோப்பையை மற்றொருவர் பறித்துக் கொள்வர், ஆனால் அதில் வீணுமில்லை, குற்றமிழைப்பதும் இல்லை.
52:24ஜுஸ் 27 · ப. 524

۞ وَيَطُوفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَهُمْ كَأَنَّهُمْ لُؤْلُؤٌ مَكْنُونٌ24

அவர்களுக்கு(ப் பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள், அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள், அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல் (இருப்பார்கள்).
52:25ஜுஸ் 27 · ப. 524

وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَاءَلُونَ25

அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள்.
52:26ஜுஸ் 27 · ப. 524

قَالُوا إِنَّا كُنَّا قَبْلُ فِي أَهْلِنَا مُشْفِقِينَ26

"இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்த போது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம்.
52:27ஜுஸ் 27 · ப. 524

فَمَنَّ اللَّهُ عَلَيْنَا وَوَقَانَا عَذَابَ السَّمُومِ27

"ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான்.
52:28ஜுஸ் 27 · ப. 524

إِنَّا كُنَّا مِنْ قَبْلُ نَدْعُوهُ ۖ إِنَّهُ هُوَ الْبَرُّ الرَّحِيمُ28

"நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம், நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன், பெருங்கிருபையுடையவன்."
52:29ஜுஸ் 27 · ப. 524

فَذَكِّرْ فَمَا أَنْتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَلَا مَجْنُونٍ29

எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர், பைத்தியக்காரருமல்லர்.
52:30ஜுஸ் 27 · ப. 524

أَمْ يَقُولُونَ شَاعِرٌ نَتَرَبَّصُ بِهِ رَيْبَ الْمَنُونِ30

அல்லது: அவர்கள் (உம்மைப் பற்றி, "அவர்) புலவர், அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழி பார்த்து இருக்கிறோம்" என்று கூறுகிறார்களா?
52:31ஜுஸ் 27 · ப. 524

قُلْ تَرَبَّصُوا فَإِنِّي مَعَكُمْ مِنَ الْمُتَرَبِّصِينَ31

"நீங்களும் வழி பார்த்திருங்கள் - நிச்சயமாக நானும் உங்களுடன் வழி பார்க்கிறேன்" என்று (நபியே!) நீர் கூறும்.
52:32ஜுஸ் 27 · ப. 525

أَمْ تَأْمُرُهُمْ أَحْلَامُهُمْ بِهَٰذَا ۚ أَمْ هُمْ قَوْمٌ طَاغُونَ32

அல்லது, அவர்களுடைய புத்திகள் தாம் அவர்களை இவ்வா(றெல்லாம் பேசுமா)று ஏவுகின்றனவா? அல்லது அவர்கள் வரம்பு மீறிய சமூகத்தாரா?
52:33ஜுஸ் 27 · ப. 525

أَمْ يَقُولُونَ تَقَوَّلَهُ ۚ بَلْ لَا يُؤْمِنُونَ33

அல்லது, இ(வ்வேதத்)தை நீர் இட்டுக் கட்டினீர் என்று அவர்கள் கூறுகின்றனரா? அல்ல. அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
52:34ஜுஸ் 27 · ப. 525

فَلْيَأْتُوا بِحَدِيثٍ مِثْلِهِ إِنْ كَانُوا صَادِقِينَ34

ஆகவே, (இவ்வாறெல்லாம் கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.
52:35ஜுஸ் 27 · ப. 525

أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَيْءٍ أَمْ هُمُ الْخَالِقُونَ35

அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?
52:36ஜுஸ் 27 · ப. 525

أَمْ خَلَقُوا السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۚ بَلْ لَا يُوقِنُونَ36

அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள்.
52:37ஜுஸ் 27 · ப. 525

أَمْ عِنْدَهُمْ خَزَائِنُ رَبِّكَ أَمْ هُمُ الْمُصَيْطِرُونَ37

அல்லது, அவர்களிடம் உம்முடைய இறைவனின் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் தாம் (எல்லாவற்றையும்) அடக்கியாள்பவர்களா?
52:38ஜுஸ் 27 · ப. 525

أَمْ لَهُمْ سُلَّمٌ يَسْتَمِعُونَ فِيهِ ۖ فَلْيَأْتِ مُسْتَمِعُهُمْ بِسُلْطَانٍ مُبِينٍ38

அல்லது, அவர்களுக்கு ஏணி இருந்து அதன் மூலம் (வானத்தின் இரகசியங்களை) கேட்டு வருகின்றார்களா? அவ்வாறாயின், அவர்களில் கேட்டு வந்தவர் செவியேற்றதைத் தெளிவான ஆதாரத்துடன் கொண்டு வரட்டும்.
52:39ஜுஸ் 27 · ப. 525

أَمْ لَهُ الْبَنَاتُ وَلَكُمُ الْبَنُونَ39

அல்லது, அவனுக்குப் பெண் மக்களும் உங்களுக்கு ஆண் மக்களுமா?
52:40ஜுஸ் 27 · ப. 525

أَمْ تَسْأَلُهُمْ أَجْرًا فَهُمْ مِنْ مَغْرَمٍ مُثْقَلُونَ40

அல்லது, நீர் அவர்களிடம் ஏதாவது கூலி கேட்டு, (அதைக் கொடுத்ததினால்) அவர்கள் கடன் பட்டு சுமையேற்றப்பட்டிருக்கின்றார்களா,
52:41ஜுஸ் 27 · ப. 525

أَمْ عِنْدَهُمُ الْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ41

அல்லது, அவர்களிடம் மறைவான செய்திகளிலிருந்து, அவற்றை அவர்கள் எழுதுகின்றார்களா,
52:42ஜுஸ் 27 · ப. 525

أَمْ يُرِيدُونَ كَيْدًا ۖ فَالَّذِينَ كَفَرُوا هُمُ الْمَكِيدُونَ42

அல்லது, அவர்கள் (உமக்கு எதிராக) ஏதாவது சூழ்ச்சி செய்ய நாடுகிறார்களா, அப்படியானால், அந்த காஃபிர்கள் தாம் சூழச்சிக்குள்ளாவார்கள்.
52:43ஜுஸ் 27 · ப. 525

أَمْ لَهُمْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ ۚ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ43

அல்லது, அவர்களுக்கு அல்லாஹ் அல்லாமல் (வேறு) நாயன் இருக்கின்றானா, அவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் மிகத் தூயவன்.
52:44ஜுஸ் 27 · ப. 525

وَإِنْ يَرَوْا كِسْفًا مِنَ السَّمَاءِ سَاقِطًا يَقُولُوا سَحَابٌ مَرْكُومٌ44

வானத்திலிருந்து ஒரு துண்டு விழுவதை அவர்கள் கண்டார்களானால், அதை அடர்த்தியான மேகம் என்று அவர்கள் கூறிவிடுவார்கள்.
52:45ஜுஸ் 27 · ப. 525

فَذَرْهُمْ حَتَّىٰ يُلَاقُوا يَوْمَهُمُ الَّذِي فِيهِ يُصْعَقُونَ45

ஆகவே அச்சத்தால் அவர்கள் உணர்விழக்கும் நாளைச் சந்திக்கும்வரை, அவர்களை விட்டு விடுவீர்களாக.
52:46ஜுஸ் 27 · ப. 525

يَوْمَ لَا يُغْنِي عَنْهُمْ كَيْدُهُمْ شَيْئًا وَلَا هُمْ يُنْصَرُونَ46

அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது, அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
52:47ஜுஸ் 27 · ப. 525

وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا عَذَابًا دُونَ ذَٰلِكَ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ47

அன்றியும், அநியாயம் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு நிச்சயமாக மற்றொரு வேதனையும் (இம்மையில்) உண்டு எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.
52:48ஜுஸ் 27 · ப. 525

وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَإِنَّكَ بِأَعْيُنِنَا ۖ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِينَ تَقُومُ48

எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திறுப்பீராக, நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக,
52:49ஜுஸ் 27 · ப. 525

وَمِنَ اللَّيْلِ فَسَبِّحْهُ وَإِدْبَارَ النُّجُومِ49

இன்னும், இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும் அவனைத்(துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக!

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு